×

சமத்துவபுரம் திறப்பு; தொழிற்பேட்டைக்கு அடிக்கல் விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் செல்கிறார்: ரூ42.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் பெரியார் சமத்துவபுரம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சிப்காட் அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பங்கேற்கிறார். இதற்கான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்றிரவு சென்னையில் இருந்து காரில் புறப்படும் அவர், புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

பின்னர் நாளை காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் பெரிய கொழுவாரி கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். அங்கு 100 வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, விளையாட்டு மைதானம், நியாய விலைக்கடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. சமத்துவபுரம் திறப்பு விழாவில் பங்கேற்கும் முதல்வர், அங்கன்வாடி மைய கட்டிடம், நூலகம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடக்கும் விழாவில், ரூ.42.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

மேலும் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீட்டு சாவியையும் முதல்வர் வழங்குகிறார். தவிர ரூ.24 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாக்களில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், பெரியகருப்பன், விழுப்புரம் கலெக்டர் மோகன், எம்பிக்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், கவுதம சிகாமணி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, டிஐஜி பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags : Samatthupuram ,Funding Festival for Labour ,Md. ,KKA ,Stalin ,Maluppuram , Opening of Samathuvapuram; Groundbreaking ceremony for the workshop; Chief Minister MK Stalin to visit Villupuram tomorrow: Provides welfare assistance worth Rs 42.50 crore
× RELATED மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்